கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியுள்ள நிலையில், நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பதில் ஜனாதிபதியாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ரணில் பதில் ஜனாதிபதியாக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சபாநாயகர் தலைமையில் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறும் கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் புதிய பிரதமர் ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளார்.
சர்வக்கட்சி அரசாங்கத்தின் பிரதமர் பதவி தொடர்பில் எதிர்க்கட்சியின் யோசனை சபாநாயகரிடம் கையளிக்கப்பட உள்ளது.
எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயரை பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்க உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் கட்சிகள் நேற்று நடத்திய சிறப்பு பேச்சுவார்த்தையின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சுயாதீனமாக செயற்படும் 10 கட்சிகளின் பிரதிநிதிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பொதுஜன பெரமுனவின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவரான டளஸ் அழகப்பெரும சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் எவரும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளவில்லை.