பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
காலே, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவான நிலையில் உள்ளது.
திமுத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி அண்மையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் களம் இறங்குகிறது. சரிசம பலத்துடன் இரு அணிகளும் மல்லுகட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். போட்டி நடக்கும் காலே ஆடுகளம் முதல் 2 நாட்கள் பேட்டிங்குக்கு அனுகூலமாக இருக்கும். 3-வது நாளில் இருந்து பந்து நன்கு சுழலும்.
இதனால் இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா, ரமேஷ் மென்டிஸ், தீக்ஷனா, பாகிஸ்தானின் நமன் அலி, யாசிர் ஷா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் மிரட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த மைதானத்தில் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதற்கு தகுந்தபடி வீரர்கள் செயல்பட வேண்டியது முக்கியமானதாகும். இந்த மைதானத்தில் கடைசியாக நடந்த 17 டெஸ்ட் போட்டியிலும் தொடர்ச்சியாக முடிவு கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி டென் 2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.