ஒவ்வொரு மாதமும் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான சுமார் 600 மில்லியன் டொலர்களை அரசாங்கத்தால் திரட்ட முடியவில்லை என்பதுடன், எரிபொருள் இறக்குமதியைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் திறைசேரி ஆகியவை மாதாந்தம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான 600 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு இனி பெற முடியாது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகத்திற்கு அறிவித்துள்ளன.
போக்குவரத்து, கைத்தொழில் மற்றும் மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு மாதமொன்றுக்கு சுமார் 150-200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அரச நிதியில் கிடைக்கும் என மத்திய வங்கி அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாம் வெளிவரும் வரை 600 மில்லியன் டொலர் தேவையை நீடிக்க முடியாது.
எரிபொருளின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும்
நாங்கள் அதிலிருந்து வெளியே வருவதற்கு எத்தனை மாதங்கள் ஆகும் என்ற காலக்கெடுவை வழங்க முடியாது. அதிக டொலர்களை வழங்க முடியும் என்று மத்திய வங்கி சொன்னவுடன் மட்டுமே விதிக்கப்பட்ட வரம்புகளை நாம் தளர்த்த முடியும்.
அதுவரை நாம் விநியோகிக்கப்படும் மற்றும் நுகரப்படும் எரிபொருளின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும். அடுத்த நான்கு மாதங்களுக்கு மாதமொன்றுக்கு 150-200 மில்லியன் டொலர்கள் என்ற தோராயமான தொகை எமக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதில் தான் நாங்கள் வேலை செய்ய வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார். ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, எரிபொருள் விநியோகத்திற்கு வாகன உரிமையாளர்களுக்கு QR குறியீட்டை வழங்குவதற்காக பாஸ் நடைமுறை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது இந்த பாஸ் நடைமுறையின்படி, ஒரு வாகன உரிமையாளரை ஒரு வாகனத்தை மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கிறது.
அவர்களின் அடையாளம், வாகன பதிவு மற்றும் வாகனத்தின் சேஸ் எண் ஆகியவற்றை அங்கீகரிக்க தகவலை வழங்க வேண்டும். வழங்கப்பட்ட தகவல்கள் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுத்தளத்தில் உள்ள விவரங்களுடன் சரிபார்க்கப்பட்டவுடன், ஒவ்வொரு பாஸக்கும் ஒரு தனித்துவமான QR குறியீடு வழங்கப்படும்.
இது வாராந்திர எரிபொருளைப் பெற எரிபொருள் நிலையத்தில் சரிபார்க்கப்பட வேண்டும்.
எரிபொருள் பாவனையில் அதிகரிப்பு
இந்த முறையின் தொடக்கத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், புதன் மற்றும் வியாழன் (20/21) நாட்களில் இந்த புதிய முறை நடைமுறைக்கு வரும் என்பதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்கும் வாகனங்களை அகற்றுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
பொதுப் போக்குவரத்திற்காக ரயில்கள் மற்றும் பேருந்துகளை இயக்குவதற்குத் தேவையான எரிபொருளின் முழுத் தேவையையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றும், சுகாதாரம், விவசாயம், தொழில்துறை மற்றும் சுற்றுலா உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருளும் வழங்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.
பல வாகனங்களை இயக்கும் பெருநிறுவனங்கள் அந்த வாகனங்களை நிறுவன அதிகாரிகளின் பெயரில் பதிவு செய்யலாம் என்றும், இதுபோன்ற ஏற்பாடு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். இந்நிலையில், தனிப்பட்ட எரிபொருள் பாவனையை குறைக்குமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தினார்.
மேலும் எரிபொருள் கறுப்பு சந்தையை ஆதரிக்க வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார். 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2022 ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் எரிபொருள் பாவனையில் 30 வீதம் அதிகரிப்பு காணப்பட்டதாக விஜேசேகர தெரிவித்தார்.
சில எரிபொருட்கள் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டாலும், எரிபொருளை பதுக்கி வைத்திருந்த மக்களும், கறுப்பு சந்தையும் நுகர்வு அதிகரிப்புக்கு காரணம் என எரிசக்தி அமைச்சர் குற்றம் சாட்டினார். இதுபோன்ற செயல்கள் குறித்து பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.