முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த மாதம் மீண்டும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,கோட்டாபய ராஜபக்ச ஓய்வு பெற்ற ஜனாதிபதியின் சிறப்புரிமைகளைப் பெற உள்ளதாகவும், கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்புக் கடற்படை, வாகனங்கள் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கப்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய விடுத்துள்ள கோரிக்கை
தற்போது வெளிநாட்டில் உள்ள கோட்டாபயவின் கோரிக்கையின் பேரில் இந்த வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினாலும் தொடர்ந்தும் சேவையாற்றுவேன் என, கோட்டாபய தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றம் கூடிய போது பதவி விலகல் கடிதத்தை அதன் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க வாசித்து காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.