கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வன்முறையின் போது வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை இழந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வீடுகளை நிர்மாணிப்பதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய போதே பதில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்,சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியவர்கள் தொடர்பில் கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், தமது ஆட்சியில் நாட்டில் வன்முறைகளுக்கு இடமளிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு
இதேவேளை, அமைச்சர்களின் அழிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பதில் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வன்முறையில் அமைச்சர்கள், சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் என 80 பேரின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.