எதிர்வரும்19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்பின் போது உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பல சிறப்பு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு பிரிவு பிராதானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை தெரிவு செய்யும் நடவடிக்கைளுக்கு எவ்வித இடையூறும் இன்றி முன்னெடுக்கவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறும் செயற்படுமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மே 09ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பிற்காக 07 பேரும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பாதுகாப்பிற்காக 06 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாதுகாப்பிற்கு மேலதிகமாக எதிர்வரும் நாட்களில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்துடன் இணைந்து கூட்டு பாதுகாப்பு வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு பிரிவு பிராதானி தெரிவித்துள்ளார்.
தற்போதும் பல அமைச்சர்கள் அடுக்குமாடி குடியிருப்புகள், நண்பர்களின் வீடுகள் மற்றும் நெருக்கமானவர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாகவும், அவர்கள் நாடாளுமன்றத்திற்கு வரும்போது எவ்வித தடைகளும் ஏற்படாத பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு பிரிவு பிராதானி மேலும் தெரிவித்தார்.