சுவிட்சர்லாந்தில் வேலை தேடும் சிலர், கோடை விடுமுறை முடியும் வரை வேலை தேடுவதை தள்ளிப்போடுகிறார்கள்.
கோடை விடுமுறைக் காலத்தின்போது மனித வள மேலாளர்கள் (Human Resources, HR) யாரும் அலுவலகத்தில் இருக்கப்போவதில்லை, தங்கள் விண்ணப்பங்களை யார் பரிசீலிக்கப்போகிறார்கள் என்று எண்ணி சிலர் அப்படி செய்கிறார்கள்.
கோடையின்போது, அதாவது ஜூலை, ஆகத்து மாதங்களில் பல நிறுவன மனித வள மேலாளர்கள் கொஞ்சமாவது விடுப்பு எடுக்கக்கூடும் என்பது உண்மைதான். ஆனால், அதற்காக மொத்த சுவிஸ் பொருளாதாரமும் கோடை முழுவதும் விடுப்பில் முடங்கிவிடப்போவதில்லை.
உண்மையில் சொல்லப்போனால், இந்தக் கோடைதான் சுவிட்சர்லாந்தில் பரபரப்பாக ஆட்களை வேலைக்கு எடுக்கும் நேரமாகும். இந்த காலகட்டத்தில் மாதம்தோறும் 200,000 வேலை காலியிடங்கள் விளம்பரப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
அதுவும் இந்த ஆண்டு, கோவிட் காலகட்டத்திலிருந்து சுவிஸ் பொருளாதாரம் நன்கு மீண்டுள்ள நிலையில், அதிக வேலைகள் காலியாக உள்ளன. நாடு முழுவதிலுமுள்ள பல தொழில் நிறுவனங்கள் தகுதியான பணியாளர்களை தேடிக்கொண்டிருக்கின்றன, சொல்லப்போனால், தகுதியான பணியாளர்களைக் கண்டுபிடிக்க கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத்துறை, உணவகத்துறை, மருத்துவம், கட்டுமானம் மற்றும் சில்லறை வர்த்தகம் ஆகிய துறைகளுக்கு பெருமளவில் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
கோடைக்காலத்தில் வேலைக்கு விண்ணப்பிப்பதில் இன்னொரு கூடுதல் நன்மையும் உள்ளது: போட்டி குறைவாக இருக்கும்!
அத்துடன், மனித வள மேலாளர்கள் வேலைப்பளு அதிகம் இல்லாமல் அமைதியாக இருக்கும் ஒரு காலகட்டம் இது. ஆகவே, வேலைக்கு விண்ணப்பிப்போர் விரைவாக நேர்காணலுக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.