ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் வெடிபொருட்கள் உள்ளதா என்பதை கண்டறிய வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலக கட்டிடத்தை ஆக்கிரமித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி மாளிகையில் இருந்து பெறுமதியான பொருட்களை திருடிய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களின் அடிப்படையில் பெறுமதியான வரலாற்றுப் பொருட்களை திருடிய பிரதான சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலை கடந்த சில நாட்களாக எதிர்ப்பாளர்கள் தடுத்து வைத்திருந்தனர்.
நிதானத்துடன் செயற்பட்ட பொலிஸார்
கொழும்பு கோட்டை பொலிஸார் ஒன்பது தடவைகள் போராட்டக்காரர்களிடம் நுழைவாயிலை விடுவிக்குமாறு நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், அவர்கள் கோரிக்கைகளை புறக்கணித்தனர்.
கடந்த சில மாதங்களாக ஜனாதிபதி செயலக நுழைவாயிலில் பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடும் வகையில் பொலிஸார் நிதானத்துடன் செயற்பட்டதை நாம் அனைவரும் அறிவோம்.
ஜூலை 9ம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கொழும்பு மத்திய பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, அவரது உதவியாளர் மற்றும் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் ஜூலை 14 மற்றும் 18ம் திகதிகளில் வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர்.
இருப்பினும், போராட்டக்காரர்கள் கோரிக்கைக்கு ஆக்ரோஷமாக பதிலளித்ததால், வளாகத்தை விட்டு வெளியேற மறுத்ததால், அவர்களை நம்புவது காவல்துறைக்கு சிரமமாக இருந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.