இலங்கைக்குள் அதிகளவில் முதலீடுகளை கொண்டு வர இந்தியா முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா கடந்த ஜனவரி முதல் இலங்கைக்கு இதுவரை 4 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி
இதற்கமைய இந்தியா எதிர்காலத்தில் தமது நாட்டின் தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் மூலம் இலங்கையின் புதிய துறைகளில் அதிக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறான துறைகளில் முதலீடுகள் செய்வது என்பது குறித்து இலங்கையின் புதிய அரசாங்கத்துடனான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொது மற்றும் தனியார் துறைகளை சேர்ந்த இந்திய முதலீட்டாளர்கள் துறைமுகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி,மின்சாரம்,விவசாயம் மற்றும் கல்வி போன்ற சில முக்கிய துறைகளில் தமது வாய்ப்புக்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
சூரிய மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தி
இதேவேளை இலங்கை மின்சார சபையின் கூட்டு ஒத்துழைப்பின் கீழ் திருகோணமலையின் சம்பூரில் சூரிய மின்சக்தி நிலையத்தை நிறுவுவதற்கு இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம் ஆலோசித்து வருகிறது.
அதேபோன்று சூரிய மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தியும் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்போது, இலங்கையின் சொந்த தேவை பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் இந்தியாவிற்கும் ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.