தைவானின் முக்கிய அரசாங்க இணையத்தளங்கள் இணையத் தாக்குதல்களில் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க மக்களவை நாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றிருந்தபோது அத்தகைய இணையத் தாக்குதல்கள் இடம்பெற்றன.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருமதி பெலோசி தைவானைச் சென்றடைந்ததும் தைவானிய அதிபர் அலுவலகம், வெளியுறவு அமைச்சு, ஆங்கில மொழியிலுள்ள முக்கிய அரசாங்க இணையத்தளம் ஆகியவை தாக்கப்பட்டன.
அந்த இணையத் தாக்குதல்கள் சீன, ரஷ்ய இணைய முகவரிகளுடன் தொடர்புடையவை என்று தைவானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
அரசாங்க இணையப்பக்கங்கள் நிமிடத்துக்கு சுமார் 8.5 மில்லியன் முறை திறக்கப்பட்டதால் தளங்கள் செயலிழந்து முடக்கப்பட்டன.
அத்தகைய தாக்குதல் DDoS – distributed denial of service என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் தைவானைத் தனது நாட்டின் ஒரு பகுதியாகக் கருதும் சீனா தைவானைச் சுற்றிப் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதன்போது வெளிநாட்டுப் படைகளிடமிருந்து எந்நேரமும் தாக்குதல் வரலாம் என்றும் வெளியுறவு அமைச்சு சூழ்நிலையைக் கண்காணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.