மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான 51 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (எக்ஸிம்) வங்கி இடைநிறுத்தியுள்ளது.
சீன எக்ஸிம் வங்கியின் முடிவால் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் அரசாங்கம்
இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சீனாவின் எக்ஸிம் வங்கி இந்த பணத்தை விடுவிப்பதை இடைநிறுத்தியுள்ளது.
இதனால், மத்திய அதிவேக நெடுஞ்சாலை சம்பந்தமான திட்டம் தொடர்பில் அரசாங்கம் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இலங்கை வெளிநாட்டு கடனை திரும்ப செலுத்துவதை இடைநிறுத்த எடுத்த முடிவும் சீனாவின் இந்த தீர்மானத்திற்கு ஏதுவாக அமைந்துள்ளது.
புறப்பட்டுச் செல்ல ஆரம்பித்துள்ள சீனப்பிரஜைகள்
இந்த நிலையில், கடவத்தையில் மற்றும் மீரீகமை இடையிலான 37 கிலோ மீற்றர் நெடுஞ்சாலை நிர்மாணிப்பு திட்டத்தில் பணியாற்றி வந்த சுமார் 500 சீனப் பிரஜைகள் புறப்பட்டுச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இதன் காரணமாக குறித்த பிரதேசத்தை மக்களின் சுமார் 2 ஆயிரம் தொழில்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பு பணிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டதுடன் அதனை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நிறைவு செய்வது என திட்டமிடப்பட்டிருந்தது.
இலங்கை அரசின் சுமார் 33 பில்லியன் ரூபா பணத்தில் இந்த அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணிப்பு பணிகளில் 32 வீதமான பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.