யாழ். வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (11.10.2022) இடம்பெற்றுள்ளது.
கம்பர்மலை, உடுப்பிட்டியை சேர்ந்த 25 மற்றும் 30 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பூட்டியிருக்கும் வீடுகளில் திருட்டு
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 11 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் உருக்கப்பட்ட தங்கம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை பகுதியில் தொடர்ச்சியாக பூட்டியிருக்கும் வீடுகளில் பகல் வேளையில் நகைகள் திருடப்படுவதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
திருடப்பட்ட நகைகள் உருக்கிய நிலையில் மீட்பு
இந்த விடயம் தொடர்பிலான விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்ட போது, பருத்தித்துறை நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் திருடப்பட்ட நகைகள் உருக்கிய நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து நகைக்கடை உரிமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.