தொடர்ந்தும் தேர்தலைக் காலம் தாழ்த்தினால் கடந்த மாதங்களில் இடம்பெற்றதை விட , பாரதூரமான மக்கள் எழுச்சி ஏற்படும். தற்போது முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களைப் போன்று அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேர்தல்களைக் காலம் தாழ்த்தி நாட்டை மேலும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அரசாங்கம் தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருந்தால் , கடந்த மாதங்களை விட பாரிய மக்கள் எழுச்சி போராட்டங்கள் தோற்றம் பெறுவதை எவராலும் தடுக்க முடியாது.
இறையாண்மையை மீற இடமளியோம்
உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் ஏற்கனவே காலம் தாழ்த்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த கால கட்டத்திலேயே இந்த தேர்தல் முறைமைகளில் திருத்தங்களை மேற்கொண்டார். தற்போது அவற்றிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறுகின்றார்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதில் எமக்கு எவ்வித சிக்கலும் கிடையாது. ஆனால் எந்த திருத்தமானாலும் அதனை விரைவாக மேற்கொள்ளுமாறே வலியுறுத்துகின்றோம். அதனை விடுத்து மக்களின் இறையான்மையை மீற முயற்சித்தால் அதற்கு ஒருபோதும் இடமளியோம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் தேர்தலில் போட்டியிட்டால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்பது தெரியும். எனவே தான் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சதித்திட்டம் தீட்டுகின்றனர்.
இனி வரும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த முடியாது
தேர்தலைக் காலம் தாழ்த்துவதன் மூலம் நாட்டை மேலும் மேலும் சிக்கலுக்கு உள்ளாக்க வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். தொடர்ந்தும் தேர்தலைக் காலம் தாழ்த்தினால் கடந்த மாதங்களில் இடம்பெற்றதை விட , பாரதூரமான மக்கள் எழுச்சி ஏற்படும். தற்போது முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களைப் போன்று அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலக நாடுகளை வெற்றி கொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த அமர்வை விட , இம்முறை இடம்பெற்ற அமர்வில் மிகக் குறைவான நாடுகளே இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. நட்பு நாடுகள் பலவும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
மஹிந்த ராஜபக்ஷ கடன் சுமையை கொண்ட நாடாக இலங்கையை மாற்றினார். கோட்டாபய ராஜபக்ச வங்குரோத்து நாடாக்கினார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடுத்த வருமானம் பெறும் நாட்டை குறை வருமானம் பெறும் நாடாக்கியுள்ளார்.
இந்த ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்கு மக்களுக்கு காணப்படும் உரிமை வழங்கப்பட வேண்டும். எனவே தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்தினால் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம் என்பதோடு , மக்களை ஒன்று திரட்டி பாரிய ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுப்போம் என குறிப்பிட்டார்.