களுத்துறை மாவட்டம் – அளுத்கம, மொரகல்ல பிரதேசத்தில் 23 வயதுடைய யுவதியொருவர் நேற்று முன் தினம் (12-10-2022) கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் குறித்த பெண்ணை கடத்திச் சென்று யக்வத்தையில் உள்ள வீடொன்றுக்கு மகிழுந்தில் ஏற்றிச் செல்ல முற்பட்டுள்ளதாக அளுத்கம காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற காவல்துறையினர் சந்தேக நபர்களை கைது செய்ததுடன் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21, 25 மற்றும் 28 வயதுடைய அளுத்கம மற்றும் மொரகல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
காதல் தோல்வி காரணமாக இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட யுவதி நேற்று முன் தினம் இரவு அளுத்கம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.