கனடாவில் இருந்து வந்து கிளிநொச்சியில் திருமணம் முடித்த இளைஞனை வழியனுப்பி வைக்க சென்ற புது மனைவி வீடு திரும்பவில்லை.
அவர்களை ஏற்றிச் சென்ற வாகனச்சாரதியும், அந்தப் பெண்ணும் தலைமறைவாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியை பூர்வீகமாக கொண்ட குடும்பமொன்று கனடாவில் வசித்து வந்தது.
சில வருடங்களின் முன்னர் பெற்றோர் சொந்த ஊருக்கு வந்து வசித்து வருகிறார்கள். அவர்களின் மகன் ஒருவர் கடந்த ஓகஸ்ட் மாத இறுதியில் சொந்த ஊருக்கு வந்து திருமணம் செய்திருந்தார்.
வெள்ளாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றை சேர்ந்த 24 வயதான யுவதியொருவரே மணமகள். திருமணம் முடிந்து, நுவரெலியாவிற்கு தேனிலவும் சென்றிருந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் மணமகன் மீண்டும் கனடா திரும்பினார். மணமகனின் பிரதேசத்தை சேர்ந்த ஹைஏஸ் வாகனமொன்றையே, இலங்கையில் தங்கியிருந்த காலப்பகுதியின் தேவைகளிற்கு அழைத்திருந்தனர்.
அந்த வாகனத்திலேயே கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் சென்றிருந்தனர். கனடா மணமகன், மணமகள், மணமகனின் ஒன்றுவிட்ட தம்பிகள் இருவர் அந்த வாகனத்தில் கட்டுநாயக்க விமான நிலையம் சென்றிருந்தனர்.
நீர்கொழும்பிலுள்ள விடுதியொன்றில் ஒருநாள் தங்கியிருந்து விட்டு, மறுநாள் கனடா மாப்பிள்ளையை வழியனுப்பி விட்டு, சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். இரவு உணவுக்காக சிலாபம் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் வாகனத்தை நிறுத்திய போது, மணமகனின் இரண்டு தம்பிகளையும் சாப்பிட்டு விட்டு, தனக்கு இரண்டு பரோட்டா பார்சல் செய்து வாங்கி வருமாறு கூறிவிட்டு, மணப்பெண் வாகனத்திற்குள்ளேயே இருந்து விட்டார்.
வீதியோரமாக சற்று தள்ளி இயற்கை உபாதை கழித்து விட்டு வருகிறேன், நீங்கள் போய் சாப்பிட ஆரம்பியுங்கள் என இரண்டு இளைஞர்களையும் வாகன சாரதியும் அனுப்பி வைத்துள்ளார். உணவகத்திற்குள் சாப்பிட்டுக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களும், சாரதி வராததால் அவரது தொலைபேசியில் அழைப்பேற்படுத்தினர். தொலைபேசி இயங்கவில்லை.
சகோதரனின் மனைவியை அழைத்த போது பதிலிருக்கவில்லை. நீண்ட நேரத்தின் பின்னர் அவர் அழைப்பையேற்று, இரண்டு இளைஞர்களையும் பேருந்தில் வீடு வருமாறு கூறியுள்ளார். தமது வாகனம் நிறுத்தப்பட்டிருந்த போது, சிலர் வந்து மிரட்டும் தொனியில் பேசியதாகவும், அவர்கள் கொள்ளையிட வந்தவர்களை போல தோன்றியதால் வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றதாக அவர்களிடம் கூறினார்.
மறுநாள் காலையில் இரண்டு இளைஞர்களும் வீடு திரும்பிய போது, மணமகள் வீட்டிலிருக்கவில்லை. மணமகளின் வீட்டிற்கும் செல்லவில்லை. வாகன ஓட்டியும் தனது வீட்டுக்கு செல்லவில்லை. அன்று மதியம், கனடாவிலுள்ள தனது கணவனிற்கு அந்த யுவதி பேஸ்புக் ஊடாக தகவல் அனுப்பிய பின்னரே நடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
தன்னை மன்னித்து விடும்படியும், வாகன சாரதியும் தானும் வாழ்க்கையை ஆரம்பிக்கப் போவதாகவும், தம்மை தொந்தரவு செய்ய வேண்டாமென்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். அன்றைய தினமே தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விடயத்தை யுவதி கூறியுள்ளார்.
அந்த ஜோடி தற்போது வவுனியாவில் தங்கியிருப்பதை அறிந்ததாகவும், எனினும், அவர்களை தொடர்பு கொள்வதை தவிர்த்து விட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.