யாழ்ப்பாணம் வலி.வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க கோரி யாழ்.தெல்லிப்பழையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று(02) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வீதி போக்குவரத்துக்கு தடை
தெல்லிப்பழை சந்தியில் முற்பகல் 10 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகி தெல்லிப்பழை பிரதேச செயலகம் வரை பேரணி சென்றடைந்துள்ளது.
தொடர்ந்து தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்பாக காங்கேசன்துறை வீதியை மறித்து போராட்டம் இடம்பெற்றுள்ளது. இதனால் வீதி போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டுள்ளது.
பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் கோரிக்கைகள் அடங்கிய மனு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் ச.சிவஸ்ரீயிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அபகரிக்கப்பட்டுள்ள காணி விபரங்கள்
இந்த போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், காணி உரிமையாளர்கள், மத குருமார்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள் அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
குறிப்பாக வலி.வடக்கில் 3027.85 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.
அதில் இராணுவத்தின் பிடியில்-2054.25 ஏக்கர்,கடற்படையின் பிடியில்-274.57ஏக்கர் விமான படையின் பிடியில்-646.50 ஏக்கர்,பொலிஸாரின் பிடியில்-52.53 ஏக்கர் விடுவிக்கப்பட வேண்டும் என வழிகாமம் வடக்கின் மீள்குடியேற்ற குழு குறிப்பிட்டுள்ளது.



















