இலங்கையின் எரிபொருள் கொள்கலன்கள், சீன கடற்படையின் கப்பல்களுக்கு இரகசியமாக கடலில் எரிபொருட்களை நிரப்பி வருவது குறித்து இலங்கையிடம் இந்தியா கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.
சீன இராணுவ கப்பல்கள்
இந்தநிலையில் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புவது தொடர்பில், வெளிப்படையான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கொண்டு வருமாறு இலங்கையை புதுடில்லி கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் சீன இராணுவ கப்பல்களை ஹம்பாந்தோட்டை அல்லது கொழும்பு துறைமுகங்களில் நிறுத்திவைக்கவோ அல்லது எரிபொருள் நிரப்பவோ அனுமதிக்கக்கூடாது என்று இந்தியா கேட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடலில் எரிபொருள் நிரப்புதல்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து இலங்கை கப்பல்கள் எரிபொருளை ஏற்றி வருவதும், சீனப் போர்க்கப்பல்களுக்கு ஆழ்கடலில் எரிபொருள் நிரப்புவதும் இந்தியா மற்றும் அமெரிக்காவை கவலையடையச் செய்துள்ளதாக இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியின் மோசமான நாட்களில் இலங்கைக்கு எரிபொருள், உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதில் இந்தியா முன்னிலையில் செயற்படுகிறது.
எவ்வாறாயினும், சீன பிரச்சினையில் புதுடில்லியின் உணர்வுகள் என்று வரும்போது கொழும்பு அதன் வாக்குறுதியை நிறைவேற்றுவதாகத் தெரியவில்லை.
வளைகுடா கடற்பகுதியில் கடற்கொள்ளையர்களின் நடமாட்டம் குறைவாக இருந்தாலும், சீனப் போர்க்கப்பல்கள் கடற்கொள்ளையர்களுக்கு எதிரான சாக்குப்போக்கை பயன்படுத்தி கிழக்கு ஆபிரிக்கா மற்றும் ஏடன் கடற்பகுதியில் அதன் போர்க்கப்பல்களை பயன்படுத்தி வருகிறது.
இந்த கப்பல்களுக்கு இலங்கையினால் எரிபொருள் நிரப்பப்படுவது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக உருவாகி வருகிறது.
இந்தியா அதிருப்தி
இந்தியாவின் ஆட்சேபனைகளை மீறி சீன உளவுக் கப்பலான யுவான் வாங் 5 ஐ ஹம்பாந்தோட்டையில் நிறுத்த அனுமதித்த பீய்ஜிங்கின் கைமுறுக்கலுக்கு இலங்கை அரசாங்கம் முன்னதாக பணிந்தது.
இதன்போது, சீன கடற்படைக் கப்பல்களுக்கு எந்த தளவாட ஆதரவையும் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்தியாவும் அமெரிக்காவும் கொழும்புக்கு தெளிவுபடுத்தியிருந்தன.
யுவான் வாங் 5 போன்ற சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல்கள் நீர்நிலை ஆய்வுகள் மற்றும் உலோக ஆய்வுகளை மேற்கொள்வதாகக் கூறப்பட்டாலும், அவை உண்மையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு அந்த பகுதியில் செயற்கைக்கோள் செயல்பாடு மற்றும் ஏவுகணை சோதனை ஆகியவற்றைக் கண்காணித்து வருகின்றன.
இது தீவிர கவலைக்குரிய பிரச்சினை என்று இந்திய தரப்பு தமது அதிருப்தியை தெரிவித்துள்ளது.