அரசாங்கம் அடக்குமுறையைக் கைவிடாவிட்டால், மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டி தக்க பாடம் புகட்டப்படும், அதற்கான ஆரம்பம் மட்டுமே இது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் இல்லாதொழிக்க வேண்டும் என கொழும்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது அரசியல் கட்சிகளின் தலைவர்களும், சிவில் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளும் வலியுறுத்தியுள்ளனர்.
அடக்குமுறையை உடன் நிறுத்த வேண்டும் என்றும், பயங்கரவாத தடைச்சட்டத்தை விரைவில் நீக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டப் பேரணி நேற்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, 43 ஆம் படையணி, சுதந்திர மக்கள் சபை உட்பட 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்கம் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
அனுமதி மறுப்பு
இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்குவதற்கு பொலிஸார் மறுத்திருந்தனர். இதற்கான காரணமும் ஏற்பாட்டுக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் காலை முதலே கொழும்பை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. போராட்டம் இடம்பெறும் எனக் கருதப்பட்ட இடங்களில் பொலிஸார், கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இருத்தபோதும், ஆர்ப்பாட்ட பேரணியைக் கைவிடுவதற்கு ஏற்பாட்டாளர்கள் மறுப்பு தெரிவித்தனர். நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் மருதானையில் இருந்து ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமானது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 43 ஆம் படையணியின் ஒருங்கிணைப்பாளர் சம்பிக்க ரணவக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோரும் மருதானையில் இருந்து, கொழும்பு கோட்டை நோக்கி நகர்ந்த பேரணியில் இணைந்திருந்தனர்.
பொலிஸ் தடுப்பரண்
‘டெக்னிகல்’ சந்தி ஊடாக கோட்டை, புகையிரத நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பங்கேற்பது என்று திட்டமிடப்பட்டிருந்தபோதும், டெக்னிகல் சந்தி மற்றும் மிதக்கும் சந்தைக்கு இடைப்பட்ட பகுதியில் பொலிஸார் குவிந்திருந்தனர்.
போராட்டக்காரர்கள் முன்னேற முடியாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு, பதற்றம் உருவானது.
தள்ளு முள்ளும் இடம்பெற்றது. பொலிஸாரின் பாதுகாப்பு கவசத்தை உடைத்துக்கொண்டு முன்னோக்கி செல்வதற்கு போராட்டக்காரர்கள் முற்பட்டாலும் அதற்கு இடமளிக்கப்படவில்லை. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா உள்ளிட்டவர்கள் பொலிஸாருடன் முரண்பட்டனர்.
கோரிக்கைக்கு உடன்படாத சஜித்
இதற்கிடையில் போராட்டக்காரர்கள் தடுக்கப்பட்ட இடத்திலேயே கூட்டம் நடத்தப்பட்டது. இதற்குப் போராட்டத்தில் பங்கேற்ற பலர் எதிர்ப்பை தெரிவித்தனர்.
பொலிஸாரின் பாதுகாப்பு தடையை உடைத்து முன்னோக்கி நகர வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரிடம் வலியுறுத்தினர்.
எனினும், அதற்கு அவர் உடன்படவில்லை. பின்னர் அங்கிருந்து வெளியேறினார். இதன்போது எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக சிலர் கோஷம் எழுப்பினர்.
அரசியல் பிரமுகர்கள், தொழிற்சங்கவாதிகள் உள்ளிட்டோர் உரையாற்றிய பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
அத்துடன், “நாம் எவரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை. திட்டமிட்டப்படி பேரணி நடத்தப்பட்டது. இது ஆரம்பம் மட்டும்தான், அரசு திருந்தாவிடின் அடுத்தக்கட்ட நடவடிக்கை இடம்பெறும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.