ஓமானுக்கு வேலை வாய்ப்புக்காக சென்ற நுவரெலியா பெண் ஒருவரை அவ் வீட்டின் உரிமையாளர் அடைத்து வைத்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து 28 வயதுடைய குறித்த பெண்ணின் தாய், குருநாகல் காவல்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இந்த முறைப்பாட்டை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியாவைச் சேர்ந்த குறித்த பெண் குருணாகலில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஊடாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஓமானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்கும், அவர் பணியாற்றும் வீட்டின் உரிமையாளருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தாம் விஷமருந்தியதாகவும் பின்னர் வீட்டின் உரிமையாளரால் அறையொன்றில் தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த பெண், தமது தாயிடம் தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில், வெளிநாட்டில் உள்ள தமது மகளை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு, யுவதியின் தாயார், காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.