முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் தமிழ் இளைஞர்கள் இணைந்து குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு ஒன்று நேற்று( 25.11.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதேசத்தினை சேர்ந்த இளைஞர்கள் பலர் தாமாக முன்வந்து குருதிக்கொடைவழங்கியுள்ளார்கள்.
மன உளைச்சலில் இளைஞர்கள்
இவர்கள் குருதிக்கொடை வழங்கும் போது புலனாய்வாளர்கள்,பொலிஸார் இடையூறினை ஏற்படுத்தியுள்ளதுடன் குருதிகொடை வழங்கிய இளைஞர்களை ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்கள்.
சிவில் உடைதரித்த புலனாய்வாளர்கள் குருதிக்கொடை வழங்குபவர்களின் விபரங்களை கேட்டறிய முற்பட்டபோது பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் வந்து என்னத்திற்காக குருதிகொடை? யார் ஏற்பட்டாளர்கள்? யார் உங்களை வரச்சொன்னது? என்ற பல்வேறு கேள்விகளைகேட்டு தங்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பிரதேச சபை உறுப்பினரின் கருத்து
சம்பவ இடத்திற்கு வருகை தந்த கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் மாவீரர் வாரமதில் எங்கள் உறவுகளை எங்களின் அழைப்பினை ஏற்று தன்னெழுச்சியாக பல இளைஞர்கள் முன்வந்து குருதிக்கொடை வழங்கியுள்ளார்கள்.
இந்த செயற்பாட்டினை குழப்பும் விதத்திலும் அச்சுறுத்துகின்ற வித்திலும் இராணுவபுலனாய்வாளர்களும் பொலிஸாரும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நாட்டில் இரத்ததானம் செய்வதுகூட ஒரு பயங்கரவாத செயற்பாடாகவே அதனை பார்க்கின்றார்கள் குருதி கொடை செய்தவர்களை அச்சுறுத்தும் வகையில் படை புலனாய்வாளர்களும் பொலிஸாரும் செயற்பட்டுக்கொண்டுள்ளமையினை வன்மையாக கண்டிப்பதுடன் இது எங்களை மனரீதியாக பாதிப்படைய செய்யும் செயற்பாடாக காணப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.