ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 14 துணைத் தலைவர்களில் ஒருவரான கிரீஸ் நாட்டின் இவா கல்லியை கத்தாருடன் ஊழல் தொடர்புகள் செய்ததாகக் கூறி பெல்ஜியம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டதை அடுத்து,ஐரோப்பிய நாடாளுமன்றம் பாரிய ஊழல் விடயத்தால் அதிர்வைக் கண்டுள்ளதாக பெல்ஜிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றம், இந்த ஊழல் குற்றச்சாட்டு விடயத்தில், சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்கிறது என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ராபர்ட்டா மெட்சோலா ட்வீட் செய்துள்ளார்.
கட்டார் நாட்டு அரசாங்கத்தின் பல்வேறு நலன்களுக்காக பரப்புரை செய்யும் செயற்பாட்டில் கல்லி ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டை பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
கட்டார் மீது கடுமையான விமர்சனங்கள்
நடப்பு உலகக்கிண்ண கால்பந்தாட்ட மைதானங்களை நிர்மாணிக்கும் போது பாதுகாப்பற்ற பணி நிலைமைகள் காரணமாக ஆயிரக்கணக்கான தெற்காசிய தொழிலாளர்கள் இறந்தமைக்காக கட்டார் மீது கடுமையான விமர்சனங்கள் வெளியிப்பட்டு வருகின்றன.
எனினும் இந்த விடயத்தில் கட்டாரின் செயற்பாடுகளை பாராட்டி இவா கல்லி சமீபத்தில் பல பொது அறிக்கைகளை வெளியிட்டார்.
பெல்ஜிய சட்டத்தரணிகள் அலுவலகம் கட்டாரின் பெயரை நேரடியாகக்குறிப்பிடவில்லை. எனினும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பொருளாதார மற்றும் அரசியல் முடிவுகளில் செல்வாக்கு செலுத்தும் சந்தேகத்திற்குரிய வளைகுடா நாடு தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்த ஊழலில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக பெல்ஜியத்தின் தலைமை சட்டத்தரணி அறிவித்தார். இதில்,சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் லூகா விசென்டினி மற்றும் இத்தாலியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் அன்டோனியோ பன்செரி ஆகியோரும் அடங்குவதாக பெல்ஜிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் செல்வாக்கு
இவர்களின் கைதை அடுத்து பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் 16 வெ்வேறு இடங்களிலும் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை சோதனை செய்து 600,000 யூரோக்களை மீட்டனர்.
இதில் 44 வயதான இவா கல்லி, ஒரு முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார், அவர் 2022,ஜனவரியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் துணைத் தலைவரானார்.
தற்போதைய குற்றச்சாட்டை அடுத்து, அவர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சோசலிஸ மற்றும் ஜனநாயகக் கட்சியினரால் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார் மற்றும் கிரேக்க சோசலிஸ்ட் கட்சியான மாற்றத்திற்கான இயக்கத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் செல்வாக்கு மிக்க பிரமுகர்களுக்கு பெரும் தொகையை செலுத்தியோ அல்லது பெரிய பரிசுகளை வழங்குவதன் மூலமாகவோ கட்டாருக்கு ஆதரவாக இந்த உலகக்கிண்ண மைதான அமைப்பின் போது, ஏற்பட்ட இறப்புக்களை மறைக்கும் வகையில் பரப்புரை செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.