கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற கார் விபத்தின் பின்னர் காரில் பயணித்த பெண்ணை கொடூரமாக தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பெண் சந்தேகநபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் கொழும்பு தெற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு 0718 59 15 78 அல்லது கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 0718 59 15 79 க்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
பம்பலப்பிட்டி பிரதேசத்தில் முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்திருந்தார்.
குறித்த விபத்து இடம்பெற்ற போது காரின் பின்னால் இருக்கையில் அமர்ந்து சென்ற பெண் ஒருவரை இரு பெண்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
இதன்போது தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் வாக்குமூலத்தை கொள்ளுப்பிட்டி பொலிஸார் பதிவு செய்துள்ளதுடன், தாக்குதலை மேற்கொண்ட இரு பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் வெள்ளவத்தை மற்றும் எல்லக்கலை பிரதேசத்தில் வசிக்கும் 42 மற்றும் 64 வயதுடைய துப்பரவு பணியினை மேற்கொள்ளும் தனியார் நிறுவனமொன்றின் ஊழியர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில்,பெண்ணை கொடூரமாக தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு பெண் சந்தேகநபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.