கொழும்பு – பொரளை பிரதேசத்திலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இடம்பெற்ற சிறுநீரக மோசடி தொடர்பில் அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப்பிரிவினர் கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரியவிடம் இன்று தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும் மேலும் பல வாக்குமூலங்களை சிறுநீரக தானம் செய்தவர்களின் உறவினர்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான தரகராக செயற்பட்டதாக கூறப்படும் ‘பாய் ‘ எனும் பெயரால் அறியப்படும் நபர் நீதிமன்றில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கோடிக்கணக்கில் பணம் தருவதாக மோசடி
இருப்பினும், அடையாள அணிவகுப்புடன் தொடர்புடைய ஆறு சாட்சிகளில் ஐந்து பேர் சுகவீனமடைந்துள்ளதால் அடையாள அணிவகுப்பை ஒத்திவைக்குமாறு கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றில் கோரியுள்ளது.
இதன்படி, இச்சம்பவத்தின் அடையாள அணிவகுப்பை எதிர்வரும் 3 ஆம் திகதி நடத்துமாறும், சந்தேகநபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, குறித்த மோசடி சம்பவத்திற்கும் தமது வைத்தியசாலைக்கு எந்தவித தொடர்பும் இல்லையெனவும், சட்டபூர்வமான விசாரணைகளுக்காக முழுமையான ஆதரவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சட்டவிரோத சிறுநீரக வர்த்தகம் குறித்த விசாரணைகளுக்காக குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர்கள் 6 பேருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.