வங்காள விரிகுடாவின் கிழக்கு பகுதியில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் (இந்தோனேசியாவின் மேற்கு கரையோரமாக) புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா இதனை தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,”இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்து வரும் சில நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தினை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு நிலையின் தற்போதைய நிலையினைப் பொறுத்தே இவ்வாறு அனுமானிக்கப்பட்டுள்ளது.
தாழ்வு நிலை வலுப்பெற்ற பின்னர் அதன் நகர்வு திசையும் கரையைக் கடக்கும் இடமும் மாறுபடலாம்.
எதிர்வரும் நாட்களில் கனமழை
இதனால் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் குளிரான வானிலையும் மீண்டும் ஆரம்பிக்கும்.
தற்போது வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது பரவலாக கிடைக்கும் மிதமான மழை எதிர்வரும் 17ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக”தெரிவித்துள்ளார்.