உற்பத்திச் செலவு மற்றும் இலாபத்தை வைத்து வெள்ளை முட்டையை 49 ரூபாவுக்கும் சிவப்பு முட்டையை 50 ரூபாவிற்கும் வியாபாரிகளுக்கு வழங்க உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்தால் நுகர்வோருக்கு சில நிவாரணம் கிடைக்கும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில்,”தற்போது உற்பத்தியாளர்கள் வெவ்வேறு விலைகளில் முட்டைகளை வர்த்தகர்களுக்கு வழங்குகின்றனர்.
பண்டிகை காலம் என்பதால், முட்டைக்கு அதிக கேள்வி இருந்தாலும், சந்தையில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கிடைக்கும் முட்டை 60 ரூபா முதல் 70 ரூபா வரையான விலைகளில் விற்கப்படுகிறது.
முட்டை உற்பத்தியாளர்கள் நிலையான விலையில் முட்டைகளை வழங்கினால், 53 ரூபாவுக்கு விற்பனை செய்யும் வகையில் முட்டைகளை வர்த்தக நிலையங்களுக்கு வழங்கமுடியும்.
இடைநிறுத்தப்பட்ட வர்த்தமானி
நுகர்வோர் விவகார அதிகார சபையானது முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையாக 43 மற்றும் 45 ரூபா வரை நிர்ணயித்திருந்தது.
எவ்வாறாயினும், கடந்த வாரம் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுடன், முட்டைக்கான சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி இடைநிறுத்தப்பட்டது.
இதன்காரணமாக அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தையும் நுகர்வோர் அதிகார சபை இழந்துள்ளது.”என கூறியுள்ளார்.