மரக்கறிகளின் விலைகள் ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில் பண்டிகை காலத்தில் இந்த விலைகள் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக மெனிங் வியாபார சங்கத்தின் துணைத் தலைவர் நிமல் அத்த நாயக்க தெரிவித்துள்ளார்.
மரக்கறி விலைகளின் இன்றைய சந்தை நிலவரம் தொடர்பில் லங்காசிறி செய்திப்பிரிவு கள ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தது.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், இன்று மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளன. நத்தார் பண்டிகை காலம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று விலைகள் உயர்ந்துள்ளன. இன்று கரட் 250 – 260 ரூபாவாகவும், லீக்ஸ் 300 – 350 ரூபாவாகவும், கறிமிளகாய் 700 – 750 ரூபாவாகவும், போஞ்சி 500 – 600 ரூபாவாகவும் விலைகள் காணப்படுகின்றன.
நத்தார் தின காலப்பகுதியில் இந்த விலைகள் இன்னும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது. காரணம் மரக்கறிகள் இங்கு கொண்டு வரும் அளவு சற்று குறைந்து வருகின்றது.
மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு
மரக்கறிகள் அதிகமாக கொண்டுவரப்பட்ட நாட்களில் விலை குறைவாக இருந்தது. ஆனால் இன்று அப்படியல்ல, விவசாயிகளுக்கு பசளை பிரச்சினை காரணமாக சரியான பயிர்ச்செய்கை இல்லை. தற்போது வழங்கப்படும் பசளைகளும் தரம் குறைந்தவையாக காணப்படுகிறது.
இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்படியேசென்றல் இன்னும் விலைகள் அதிகரிக்கும். இன்று மரக்கறிகள் மாத்திரம் அல்ல, முட்டைகள் மீன் வகைகள், இறைச்சி வகைகள் என எல்லாவற்றின் விலைகளுகம் அதிகரித்துள்ளன. மரக்கறிகள் மாத்திரம் தான் இன்று மக்களுக்கு உண்ண கூடியதாகவுள்ளன.
அதற்கும் இன்று மக்களிடம் பணம் இல்லை. விசாயிகளுக்கு விவசாயம் செய்ய பணம் இல்லை. மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுளோம். இங்கு தற்போது குறைந்த விலையில் பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்றவை தான் உள்ளன. மக்களுக்கு இனி அதை மட்டும் தான் சாப்பிட முடியும். போகின்ற போக்கில் அதுவும் கிடைக்காது என குறிப்பிட்டுள்ளார்.