தனது கடவுச்சீட்டைத் திருப்பித் தருமாறு, இலங்கை அதிகாரிகளை வலியுறுத்த முடியாது என்று இலங்கையில் உள்ள பிரித்தானிய அதிகாரிகள் கூறியதன் காரணமாக, தாம் தொடர்ந்தும் 6 மாதக்காலமாக இலங்கையில் சிக்கியிருப்பதாக ஸ்கொட்லாந்து வலைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
தாம் மீண்டும் தாய்நாட்டுக்கு செல்ல பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் உதவவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மருத்துவ வீசா
மருத்துவ வீசாவில் இலங்கைக்கு வந்திருந்த கெய்லீ ஃப்ரேசர், காலிமுகத்திடல் போராட்டம் இடம்பெற்றபோது, அதனை தமது வலைப்பதிவின் ஊடாக ஒளிபரப்பி, அந்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தார்.
இதனையடுத்து அவரின் கடவுச்சீட்டு மற்றும் ஆவணங்களை இலங்கை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்தநிலையில் சட்டப்போராட்டத்தின்போது, தனது ஆவணங்களைத் திரும்பப் பெற நீதியரசர்கள் மறுத்ததுடன், அடுத்த ஆண்டு ஜூலை வரையில் வழக்கை விசாரிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, தமது பாதுகாப்புக்கு பயந்து கடந்த அக்டோபரில் தலைமறைவாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கெய்லீ குறிப்பிட்டுள்ளார்.
விரக்தியடைந்த கெய்லி, தலைநகர் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தைத் தொடர்புகொண்டுள்ளார்.
இது தாயகம் திரும்புவதற்கான உதவியைப் பெறுவதற்கான கடைசி முயற்சியாகும், ஆனால் அவரது ஆவணங்கள் அல்லது தனிப்பட்ட உடைமைகளை ஒப்படைக்குமாறு இலங்கை அதிகாரிகளை வற்புறுத்த முடியாது என்று அந்த இராஜதந்திரிகள் கூறிவிட்டதாக கெய்லீ குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
தனது சட்டப் போராட்டம் இப்போது ஆறு மாதங்கள் தாமதமாகிவிட்ட நிலையில், தாம் இப்போது நாட்டில் சிக்கியிருப்பதாகவும், பொது இடங்களில் தன் முகத்தைக் காட்டினால், தாம் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கெய்லீ அச்சம் வெளியிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் தனது மனித உரிமைகள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன.
இந்தநிலையில் சிரேஸ்ட சட்டத்தரணியான ஜெஃப்ரி அழகரத்தினம் ஊடாக, கெய்லீ தனது பொருட்களை திரும்பப் பெறுவதற்கான புதிய முயற்சியை எடுத்துள்ளார்.
முன்னர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு தலைமை தாங்கிய அழகரத்தினம், தனக்கு விசாரணையை மறுப்பது அவரது மனித உரிமை மீறல் என்று வாதிடுவார் என எதிர்பார்ப்பதாக கெய்லி, டெய்லி ரெக்கோட் என்ற பிரித்தானிய ஊடகத்திடம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.