சீனாவில் கொரோனா தொற்றுக்கள் அதிகரித்து வருவதால், சீன அதிகாரிகள் நாட்டின் கொரோனா பற்றிய நிகழ் நேர தகவல்களைப் பகிர வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது.
கடந்த சில வாரங்களாக சீனாவில் பல கடுமையான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன, ஆனால் தொற்றுக்கள் அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக ஏனைய பல நாடுகள் இப்போது சீனாவில் இருந்து வரும் பயணிகளை சோதனைக்கு உட்படுத்துகின்றன.
அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், தென்கொரியா, இந்தியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா சோதனைகளை விதித்துள்ளன.
சீனாவில் இருந்து வருவோரால் வைரஸ் மீண்டும் பரவக்கூடும் என்று இந்த நாடுகள் அஞ்சுகின்றன.
மேலும் சீனாவில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் பயணிகள் விமானத்தில் ஏறும் முன்னரே, கொரோனா இல்லையென்ற சோதனை அறிக்கையை வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் சுகாதார மைய அதிகாரிகள், சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.
இதன்போது தொற்றுநோயியல் நிலைமை குறித்த குறிப்பிட்ட மற்றும் நிகழ்நேர தரவுகளை தவறாமல் பகிர்ந்து கொள்ளுமாறு அவர்கள் கோரியுள்ளனர்.
தரவுகள் தரப்படுமானால், அவற்றை தடுக்கக்கூடிய உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும், தடுப்பூசி குறித்த சிக்கலைத் தீர்க்க உதவுவதாகவும் சுகாதார மையம் உறுதியளித்துள்ளது.
சீன அரசாங்கம் ஒரு நாளைக்கு சுமார் 5,000 பேர் தொற்றால் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
இருப்பினும் ஆய்வாளர்கள் அத்தகைய எண்கள் பொய்யானவை என்று கூறியுள்ளன.
நாளொன்றுக்கு 10லட்சம் பேர் வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக டிசம்பர் முழுவதும் 13 கொரோனா உயிரிழ்ப்புகள் மட்டுமே நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இருப்பினும், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சுகாதார தரவு நிறுவனமான ஏர்ஃபினிட்டி சீனாவில் சுமார் 9,000 பேர் கொரோனா தொற்றினால் நாள்தோறும் இறக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது.