பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு சர்வதேச சமூகம் இலங்கையை வலியுறுத்தியுள்ளது.
13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியா மீண்டும் இலங்கையிடம் கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை குறித்த நான்காம் அகில கால மீளாய்வின் போது இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை குறித்த அறிக்கை நாளைய தினம் ஜெனீவா நேரப்படி மாலை 4.30 மணிக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இலங்கையின் நடவடிக்கைகளில் திருப்தி
சட்டவிரோத ஆட்கடத்தல் தடுப்பு, கோவிட் தடுப்பூசி ஏற்றுகை, பால் நிலை வன்முறைகளை கட்டுப்படுத்தல் போன்ற விடயங்களில் இலங்கையின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்தல், மரண தண்டனையை ரத்து செய்தல், மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைகளை உறுதி செய்தல், குரோதப் பேச்சுக்களை தடுத்தல், காலமாறு நீதிப் பொறிமுறையை முழுமையாக நடைமுறைப்படுத்தல், பணியிடங்களில் பெண்களின் உரிமைகளை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.