பல கடவுச்சீட்டுக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான அரச பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நபர் ஒருவர் பல கடவுச்சீட்டுக்களை நபர்களிடம் பெற்று வருவதாக பொலிஸ் விசேட பிரிவு பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நேற்றையதினம் சம்பவ இடத்திற்கு சென்ற கல்முனை தலைமையக பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
சந்தேகநபர் கைது
இதன்போது, மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி பகுதியைச் சேர்ந்த 51 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் குறிப்பிட்டு சிலரிடம் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளார்.
கைதான நபர் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கைது செய்யப்பட்ட நபரிடம், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் வங்கி கணக்கின் ஊடாக பலரிடம் பணக்கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேக நபர் வசம் இருந்த கடவுச்சீட்டுக்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இவ்வாறு வரவழைக்கப்பட்டவர்கள் அனைவரும் நற்பிட்டிமுனை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் தமது கடவுச்சீட்டுக்களை சந்தேக நபரிடம் மத்திய கிழக்கு வேலைவாய்ப்பிற்காக வழங்கியதாகவும் அதற்காக சந்தேக நபரின் வங்கி கணக்கிற்கு பெருந்தொகையான பணத்தை வைப்பிலிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
மேலும், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் ஆலோசனையின் அடிப்படையில் கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமையில் பொலிஸ் குழுவினர் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் வாக்குமூலங்களை பெற்றுள்ளதுடன் கைதான சந்தேக நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அனுப்புகின்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரா அல்லது இடை தரகரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.