யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவுக் கூட்டம், கோரமின்மை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு புதிய இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று காலை 10:00 மணிக்கு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் தலைமையில் ஆரம்பமாகியது.
கூட்டத்துக்கான நிறைவெண் இல்லை
எனினும் கூட்டத்ததுக்குத் தேவையான நிறைவெண் இல்லாத காரணத்தால் கூட்டம் 10:30 மணிக்கு ஆரம்பமாகும் என்று உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தார். மீண்டும் 10:30 மணிக்குக் கூட்டம் ஆரம்பமாகிய நேரத்தில் 19 உறுப்பினர்கள் மட்டுமே சபா மண்டபத்தினுள் பிரசன்னமாகியிருந்தனர்.
இந்நிலையில், கூட்டத்துக்கான நிறைவெண் இல்லாத காரணத்தால் இன்றைய கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தெரிவுக்கான புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்ட வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட், கடந்த 28 ஆம் திகதி சமர்ப்பித்த 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பிலும் அது பெரும்பான்மை இல்லாமல் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாகப் பதவி இழந்திருந்தார்.
அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் இன்று 10 ஆம் திகதி வெள்ளிக் கிழமை கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் யாழ். மாநகர முதல்வர் தெரிவு ஒத்திவைக்கபப்ட்டுள்ளது.