கடுமையான காய்ச்சல், தலைவலி, இரத்தக் கசிவை ஏற்படுத்தி உயிரைக் கொல்லும் தீவிர தன்மை உடைய, ‘மார்பர்க் வைரஸ்’ ஆபிரிக்காவில் வேகமாக பரவி வரும் நிலையில் அது குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது ஆபிரிக்க நாடுகளுக்கு செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, அமெரிக்காவின் சி.டி.சி., எனப்படும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரித்துள்ளது.
மார்பர்க் வைரஸ்
மேற்கு ஆபிரிக்க நாடான கினியில், மார்பர்க் வைரஸ் பரவல் இருப்பது கடந்த பெப்ரவரி மாதம் கண்டறியப்பட்டது. இதுவரை ஒன்பது பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதை உலக சுகாதார ஸ்தாபனம் உறுதி செய்துள்ளது.
ஆபிரிக்காவில் உள்ள பழந்தின்னி வௌவால்களிடம் இருந்து இந்த வைரஸ் பரவுகிறது. இந்த வைரஸ் வௌவால்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை.
அறிகுறிகள்
எபோலா வைரசை போல மிக தீவிரமான பாதிப்புகளை மார்பர்க் ஏற்படுத்துகிறது.
கடுமையான காய்ச்சல், தலைவலி, உள் உறுப்புகள் மற்றும் உடலில் வெளிப்புறங்களில் இரத்தக் கசிவு போன்றவை மார்பர்க் வைரசின் அறிகுறிகள் என, மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதேசமயம் இந்த வைரஸ் 88 சதவீதம் உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது. உடலில் உள்ள வெட்டுக் காயம், வியர்வை உள்ளிட்டவை வாயிலாக தொற்று பரவுகிறது.
தற்போது மேற்கு ஆபிரிக்க நாடுகளான கினி மற்றும் தான்சானியாவில் வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே ஆபிரிக்க நாடுகளுக்கு செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, அமெரிக்காவின் சி.டி.சி., எனப்படும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரித்துள்ளது.




















