கால சர்ப்ப தோஷம் என்பது என்ன? காலத்தால் மறுக்கப்பட்டவர்கள். காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள். இதை எதிர்த்து நின்று மேலே வருகிறவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு 39 வயதிலிருந்து மிகவும் உச்சமாக இருக்கும். உச்சத்திற்கும் வருவார்கள்.
ஆனால் அதுவரைக்கு உண்டு இல்லை என்று ஆக்கும். குறிப்பாக 26 வயது வரை ஒரு வழியாக்கி விடும்.ஆனாலும் திருமணம் போன்ற விஷயங்களுக்கு இந்த கால சர்ப்ப தோஷம் எந்த விதத்திலும் பாதிப்பை உண்டாக்குவது இல்லை என்பதை முழுமையாக நம்பலாம். அத்தகைய கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும். ராகுவின் ஆலயங்களாக திருநாகேஸ்வரம் மற்றும் திருப்பாம்புரம் அமைந்துள்ளது.
இந்த ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் சென்று இறைவனை வழிபட ராகுவின் தோஷம் விலகி நன்மைகள் நடக்கும். சீர்காழி – மயிலாடுதுறை சாலையில் இருக்கும் கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி ஆலயம் கேது பரிகார ஸ்தலமாக உள்ளது. இந்த ஆலயத்திற்கு சனிக்கிழமையில் சென்று இறைவனை தரிசித்தால் கேதுவின் தோஷம் நீங்கி நன்மைகள் நடக்கும். ஸ்ரீகாளகஸ்தி, ராகு-கேது இருவருக்குமான ஸ்தலமாக இருக்கிறது. இந்த ஆலயத்திற்குச் சென்று வருவது ராகு கேதுவின் தோஷம் வீரியத்தைக் குறைக்கும்.
மேலும் கேதுவின் ஆதிக்கத்தை குறைத்துக்கொள்ள காஞ்சிபுரம் சித்ரகுப்தன் ஆலயத்திற்கு சென்று வருவது நல்ல பலன்களைத் தரும். அதுமட்டுமல்லாமல் ஸ்ரீ துர்கை வழிபாடும், புற்று உள்ள அம்மன் ஆலயங்கள், கருமாரியம்மன் ஆலயம், நாகாத்தம்மன் ஆலயம் முதலான கோயில்களுக்கு அடிக்கடி சென்று வருவது ராகு கேதுவின் வீரியத்தைக் குறைத்து நன்மைகளை அதிகப்படுத்தித் தரும்.