பூச்சிக்கொல்லி கட்டுப்பாட்டு சட்டத்தை (PCA) உடனடியாக திருத்த நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பூச்சிக்கொல்லி பதிவாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த தீர்மானம் நாட்டில் போலியான மற்றும் தரமற்ற பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை விற்பனை செய்யும் மோசடி காரணமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள சட்டங்களின்படி, தரமற்ற பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை விற்பனை செய்தல், நாட்டிற்கு கடத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தல் தொடர்பான அபராதம் மற்றும் சிறைத்தண்டனைகள் அந்த கடத்தல்காரர்களுக்கு போதுமான தாக்கத்தை ஏற்படுத்தாது.
இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் தரமற்ற களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை கடத்துபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1.5 மில்லியன் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் வகையில், PCA திருத்தப்பட்டு, புதிய சரத்துக்களை உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பூச்சிக்கொல்லிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் விவசாயிகளுக்கு கொள்வனவு செய்ய முடியாத நிலையில் , பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளை 20 கிராம் பாக்கெட்டுகளில் சந்தைக்கு வெளியிட அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற இடங்களில் திடீர் சோதனை நடத்த நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலக அதிகாரிகள் அடங்கிய பல குழுக்களை ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.