மரண தறுவாயிலும் மனைவிக்கு மறுவாழ்வு கொடுத்து திரைக்கதையை யாதர்த்தமாக்கிய மருத்துவர் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தெலங்கானா மாநிலம் கம்மன் பகுதியைச் சேர்ந்த மருத்துவரான 34 வயதுடைய ஹர்ஷவர்தன் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.
திருமணம்
இவருக்கும் இவரது உறவுக்கார பெண் ஒருவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் திகதி பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
9 நாட்களில் ஹர்ஷவர்தன் மீண்டும் வேலைக்காக ஆஸ்திரேலியா சென்று தனது மனைவியை அங்கு அழைத்துச் செல்ல தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மனைவியின் விசாவுக்காக காத்திருந்த ஹர்ஷவர்தனன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர் திடிரென ரத்த வாந்தி எடுத்துள்ளார்.
மருத்துவரான இவர் முழு உடல் பரிசோதனை செய்துள்ள போது ஹர்ஷவர்தன் தனக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.
தனது மரணத்தை கணித்த அவர் தனது மனைவி இளம் கைம்பெண் ஆகக்கூடாது என்பதற்காக அவரிடம் பேசி விவாகரத்து பெற்றுள்ளார்.
மனைவிக்கு மறுவாழ்வு
அதோடு அவருக்கு தேவையான பொருளாதார ஏற்பாடுகளையும் இன்சூரன்ஸ் மூலம் செய்து கொடுத்துள்ளார்.
மகனுக்கு புற்றுநோய் இருப்பதை அறிந்த பெற்றோர் சிகிச்சைக்காக இந்தியா வரச் சொல்லி கெஞ்சியுள்ளனர்.ஆனால் ஆஸ்திரேலியாவில் சிறப்பான சிகிச்சை கிடைப்பதாகக் கூறி, அங்கே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
எப்படியும் இரண்டு ஆண்டுகள் தான் தனது ஆயுட்காலம் என்பதை அறிந்து தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்பதற்காக தனது இறப்புக்கு பின் தேவையான வேலைகளையும் ஹர்ஷவர்தன் செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய அதிகாரிடம் பேசி இறந்த பின் தன் உடலை விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதற்கு தேவையான பணத்தையும் முன்பே செலுத்தியுள்ளார்.
சவப்பெட்டியையும் முன்பே ஆர்டர்
அத்தோடு தனது உடலை எடுத்துச்செல்ல 3 லட்சம் ரூபாய் செலவில் சவப்பெட்டியையும் முன்பே ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.
இந்த சூழலில் தான் அவரது உடல்நிலை கடந்த மாதம் மிகவும் மோசமாகியுள்ளது. கடந்த மாதம் 23-ம் திகதி தனது நண்பர்களை தொடர்பு கொண்ட அவர் இன்னும் சில மணி நேரங்களில் தான் இறக்க உள்ளதாகக் கூறி ஏற்கனவே செய்திருந்த ஏற்பாடுகள் படி நடக்க அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல அன்றே அவர் நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். அதன்பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு அவர் ஆர்டர் செய்து வாங்கி வைத்திருந்த சவப்பெட்டியில் எடுத்துச்செல்லப்பட்டது.
அவரது இறுதிச்சடங்கு கடந்த 5-ம் தேதி நடந்து முடிந்த நிலையில் இந்த தகவல்கள் குறித்து ஹர்ஷவர்தன் நண்பர்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தனது இறப்பை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என திட்டமிட்டு அனைத்தையும் செய்த ஹர்ஷவர்தன் செயல் பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.