திருகோணமலை – நிலாவெளி மற்றும் கிண்ணியா கடற்கரைப் பகுதிகளிலும் யாழ்ப்பாணம் சாலை கடற்பரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேரை கடற்படையினர் கைது செய்தனர்.
சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட 4 டிங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி உபகரணங்கள் மற்றும் டைவிங் கியர் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மீன் வளத்தின் நிலைத்தன்மையை அச்சுறுத்தும் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்கும் நோக்கில், கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கரையோர மற்றும் கடல் பகுதிகளில் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட SLNS விஜயபா கப்பல் நிலாவெளி கடற்கரைப் பகுதியிலும், அடுக்குப்பாடு கடற்பகுதியிலும் கடந்த(09.09.2023) ஆம் மற்றும் (10.09.2023) ஆம் திகதிகளில் அனுமதியற்ற வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்த சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்ட 02 டிங்கி படகுகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையில், வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட வெத்தலகேணி கடற்படையினர், கடந்த (10.09.2023) ஆம் திகதி காலை, சாலைக்கு அப்பால் இலகுரக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.
குறித்த நபருடன், அவர் வசம் இருந்த டிங்கி படகு மற்றும் அனுமதியற்ற மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன. இதே வகையில், திருகோணமலை உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தின் உதவியுடன் நேற்று (11.09.2023) கிண்ணியா சின்னமுலச்சேனை கடற்கரைப் பகுதியில் SLNS கோகன்னா மற்றும் SLNS பரகும்பா ஆகியன இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன.
இந்த நடவடிக்கையால் மீன் பிடிக்க டைவிங் பணியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையின் போது அந்த நபர்கள் பயன்படுத்திய டிங்கி மற்றும் டைவிங் கியர் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் நிலாவெளி, திருகோணமலை மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள், 22 முதல் 51 வயதுக்குட்பட்டவர்கள்.
கைப்பற்றப்பட்ட டிங்கி படகுகள் மற்றும் ஏனைய அனுமதியற்ற மீன்பிடி மற்றும் டைவிங் உபகரணங்களுடன் 12 பேரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.