லிபியாவில் ஆலிப்பேரலைக்கு நிகராக ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரமான டெர்னாவில் உள்ள அதிகாரிகளின் தகவல்களுக்கமைய இதுவரையில் சுமார் 2 ஆயிரத்து 300 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டேனியல் சூறாவளி தாக்கியதை அடுத்து டெர்னாவில் இரண்டு நீர்த்தேக்கங்களும் நான்கு பாலங்களும் உடைந்து நகரின் பெரும்பகுதி நீரில் மூழ்கின.
சுமார் 10 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
எகிப்து உட்பட சில நாடுகளின் உதவிகள் லிபியாவை சென்றடைந்துள்ளன.
எனினும் லிபியாவில் காணப்படும் அரசியல் சூழ்நிலையால் மீட்பு முயற்சிகள் தடைபட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.