சிறுவர்களை யாசகத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பொறிமுறையொன்றைப் பரிந்துரைப்பதற்காக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடிய போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறுவர்களையும் பெண்களையும் வியாபார நோக்கத்திற்காக யாசகம் செய்வதற்குப் பயன்படுத்துவது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறுவர்கள் யாசகத்துக்காக பயன்படுத்தப்படுவது முற்றாகத் தடுக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம் கடந்த செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 41 நகரசபைகள் மற்றும் 24 மாநகரசபைகைளை உள்ளடக்கிய வகையில் யாசகர்கள் குறித்து கணக்கெடுப்பொன்றை நடத்தியிருப்பதாக சமூக சேவைகள் திணைக்களம் இதன்போது தெரிவித்துள்ளது.
இந்தக் கணக்கெடுப்பின் தரவுகள் பதிவுசெய்யப்பட்டு வருவதாகவும், இதுவரை பதிவுசெய்யப்பட்ட தரவுகளுக்கு அமைய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் மூவாயிரம் முதல் நான்காயிரம் வரையிலான யாசகர்கள் இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தரவுகள் முழுமையாகப் பதிவுசெய்யப்பட்டதன் பின்னர் யாசகத்துக்குப் பயன்படுத்தப்படும் சிறுவர்கள் பற்றிய தகவல்களை வழங்க முடியும் என சமூக சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.