எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
இரண்டு வாரங்கள் தடை
நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவரது கையில் இருந்த ஆவணத்தை பிடுங்கிச் சென்ற குற்றத்திற்காக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு இரண்டு வாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தாம் வருந்துவதாக அவர் தெரிவித்துள்ளார். சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்ததன் மூலம் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றிருக்க கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோரின் நடவடிக்கைகளும் ஏற்புடையது அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இருவரும் நாடாளுமன்றின் நிலையியற் கட்டளைகளையும், நாடாளுமன்றின் சிறப்பு உரிமைகளையும் மீறி செயற்பட்டு உள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே அந்த இருவருக்கு எதிராகவும் தண்டனை வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.