அம்பாறை பிரதேசத்தில் தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் அம்பாறை பன்னல்கம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நபரின் மனைவி 6 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக சென்றுள்ளார்.
குறித்த காலப்பகுதியில் தந்தை தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வெளிநாட்டில் உள்ள தனது தாயிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் பெண் தனது கணவரிடம் வினவிய நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தால், குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக கணவன் மிரட்டியதாக அப்பெண் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
அந்த அச்சுறுத்தலுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் அறிவிக்க தாய் நடவடிக்கை எடுத்திருந்தார்.
தகவல் கிடைத்ததும் உடனடியாக செயற்பட்ட தமன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது திடீரென வீட்டுக்குள் ஓடிய சந்தேக நபர், அங்கிருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.