பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பள முறைமையை மாற்றி புதிய பொறிமுறையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் நேற்று (08.12.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடும் போது,
“பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் நாம் உட்பட கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்பு
அத்துடன், தற்போதைய சூழ்நிலையில் சம்பள உயர்வு அவசியம் எனவும் ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளதுடன் அவருடைய முயற்சியையும் யோசனையையும் நாம் வரவேற்கின்றோம்.
கூட்டு ஒப்பந்த முறைமை ஊடாக குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறும், அவ்வாறு இல்லையேல் மாற்று முன்மொழிவை எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் முன்வைக்குமாறும் ஜனாதிபதி பணிப்பு விடுத்துள்ளார்.
1700, 2000 என இலக்கங்களை மையப்படுத்திக்கொண்டிருக்காமல், நாள் சம்பள முறைமையில் இருந்து மாற வேண்டும்.
கூட்டு ஒப்பந்தம்
இந்த விடயத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். தற்போதைய சம்பள முன்மொழிவு என்பது தற்காலிக தீர்வாகவே அமையும். எமக்கு நிரந்தர தீர்வு அவசியம்.
எமது மக்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வருமானம் கிடைக்கும் வகையிலான பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம்.
சிவில் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். எமது அமைச்சின் ஊடாகவும் சம்பள பொறிமுறையொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது.
கூட்டு ஒப்பந்தம் அவசியம் என்பதை அதனை விமர்சித்த தரப்புகளே இன்று ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே, அந்த முறைமை மீண்டும் வரும்” என தெரிவித்தார்.