நாட்டில் அதிகரிக்கப்பட்டிருக்கும் வரி வருமானங்களை முறையாக சேர்க்கும் பொறுப்பு அரச அதிகாரிகளுக்கே இருக்கிறது.அதனை செய்ய தவறும் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று(14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,”நாட்டின் மொத்த வருமானம் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை எட்டக்கூடியதாக இருக்கிறது நாட்டை கட்டியெழுப்ப பயணிக்க வேண்டிய வழியை ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.
அதன் பிரகாரம் செயற்பட்டு வருவதாலே தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் உதவியும் எமக்கு கிடைக்க இருக்கிறது.
ஊழல் மோசடி
வங்குராேத்து அடைந்திருக்கும் நாட்டை மீள கட்டியெழுப்ப அரச வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். அதனாலே தற்போது வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
அதனால் அரச வருமானங்களை சேகரிக்கும் அதிகாரிகள் அதனை முறையாக செய்ய வேண்டும். கடந்த காலங்களில் இந்த அதிகாரிகள் தங்களின் பொறுப்பை முறையாக செய்ய தவறியதாலே அரச வருமானம் குறைவடைந்திருந்தது.
இந்த அதிகாரிகளின் மோசடிகளை நிறுத்த இவர்களின் செயற்பாடுகளை கண்காணிக்கவும் முறையாக செயற்படாத அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்கவும் தற்போது சட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் அரச வருமானம் சேகரிக்கும் அதிகாரிகளில் இருக்கும் ஊழல் மோசடிமிக்க அதிகாரிகளை கண்டுபிடிக்க வேண்டும். எதிர்வரும் ஜனவரி முதல் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.”என தெரிவித்துள்ளார்.