நியூசிலாந்து – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷ் வீரர் சௌம்யா சர்கார் முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
நியூசிலாந்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சௌம்யா சர்கார் 151 பந்துகளில் 169 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்துள்ளார்.
இதற்கு முன் ஒரு ஆசிய வீரரால் நியூசிலாந்து மண்ணில் பெறப்பட்ட தனிப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாக 2009ஆம் ஆண்டு சச்சினால் எடுக்கப்பட்ட 163 ஓட்டங்களே இருந்தது. தற்போது இந்த சாதனை சௌம்யா சர்காரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணி தோல்வி
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பங்களாதேஷ் அணியை துடுப்பெடுத்தாடுமாறு அழைப்பு விடுத்திருந்தது.
சௌம்யா சர்காரின் சிறப்பான ஆட்டத்தினால் பங்களாதேஷ் அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 291 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 46.2 ஓவர்களில் குறித்த இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
பங்களாதேஷ் அணி போட்டியில் தோல்வியுற்ற போதிலும் சௌம்யா சர்காரின் சாதனை துடுப்பாட்டத்தினால் பங்களாதேஷ் கிரிக்கெட் ரசிகர்கள் சிறிது ஆறுதலடைந்துள்ளனர்.