இலங்கையில் பல மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருவதால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகிரித்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
நோட்டன் விமலசுரேந்திர நீர்த்தேக்கம்
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (01.01.2024) காலை முதல் ஒரு சில பிரதேசங்களில் கடும் மழை பெய்ததுடன் பல பிரதேசங்களில் மழையுடனான காலநிலையே காணப்படுகின்றது.
இந்நிலையில், நோட்டன் பகுதியில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நோட்டன்பிரிஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் அனைத்து வான் கதவுகளிலும் நீர் வான் பாய்ந்து வருவதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீரேந்தும் பிரதேசங்களுக்கு கிடைத்து வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக காசல்ரி, கெனியோன், லக்ஸபான நவலக்ஸபான, பொல்பிட்டடிய, மவுசாக்கலை, மேல்கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் வான்பாயும் அளவினை எட்டியுள்ளன.
எனவே, எந்த வேளையிலும் வான் கதவுகள் தன்னிச்சையாக திறக்கப்படலாம் என்பதனால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, நீர்த்தேக்கங்களில் நீர் போதியளவில் கிடைக்கப்பெறுவதனால் நீர் மின் உற்பத்தியும் உச்ச அளவில் இடம்பெற்று வருவதாக மின்சாரத்துறை பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு உன்னிச்சை குளம்
கடந்த சில நாட்களாக மட்டக்களப்பில் பெய்த மழை காரணமாக உன்னிச்சை குளத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரிய குளமான உன்னிச்சை குளம் 33 அடி நீரினை கொள்லளவாக கொண்டுள்ள நிலையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அறிக்கையின் பிரகாரம் 10″ இற்கு மேல் நீர் வான் பாய்வதனால் குளத்தின் 3 கதிவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் ஒரு கதவு 60″ ஆகவும் ஏனைய இரண்டு கதவுகளும் 72″ ஆகவும் திறக்கப்பட்டுள்ளன.
உன்னிச்சை குளத்தின் வான்கதவுகள் மூன்று திறக்கப்பட்டுள்ளமையால் அப்பிரதேச விவசாய நிலங்கள் மற்றும் அப்பிரதேச மக்கள் பாதிக்கப்படக்கூடிய நிலைமை காணப்படுகிறது.
அப்பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு உன்னிச்சை குளம் திறக்கப்பட்டுள்ளமையினால் வவுணதீவு – ஆயித்தியமலை பிரதான விதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.