முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் உத்தரவு பெப்ரவரி 29 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் மனித பாவனைக்கு உதவாத தரம்குறைந்த இம்யூனோகுளோபிலின் மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பிலான விசாரணைகளை அடுத்து கடந்த 2ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கெஹலிய கைது செய்யப்பட்டார்.
இதனடிப்படையில், மாளிகாகந்த நீதிமன்றில் கடந்த 3ஆம் திகதி முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
தரமற்ற மருந்து இறக்குமதி
அதன் பின் சுகயீனம் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் கெஹெலிய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் தரமற்ற இம்யூனோகுளோபிலின் மருந்து இறக்குமதி தொடர்பான வழக்கு மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள 06 பேர் மற்றும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள ஒருவர் என 07 பேர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் கெஹெலிய ரம்புக்வெல்ல மாத்திரம் நீதிமன்றத்துக்கு வருகை தரவில்லை.
அதற்குப் பதிலாக அவர் கடுமையான உயர் குருதி அழுக்க நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை நிர்வாகத்தின் மருத்துவ சான்றிதழ் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி உத்தரவு
இதன்படி கெஹலியவின் சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன , கெஹெலியவின் உடல்நிலையை காரணம் காட்டி அவுருக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றத்தில் வாதம் செய்தார்.
எனினும் கெஹெலிய உள்ளிட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 29ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி லோசனா அபேவிக்கிரம உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் கெஹெலியவுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்குமாறு சிறைச்சாலை நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டுள்ளார்.