இலங்கை மின்சார சபையின் நிதிச் செயற்பாடுகளில் அவதானிக்கப்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையில் கடந்த நிதியாண்டில் (2023) இலங்கை மின்சார சபை அதிகளவான இலாபத்தினை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை செய்யப்படாத இடைக்கால நிதிநிலை அறிக்கைகள் இலங்கை மின்சார சபை குழுமத்திற்கு 75.7 பில்லியன் ரூபாய் இலாபமும் மின்சார சபை வாரியத்திற்கு 61.2 பில்லியன் ரூபாய் இலாபமும் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் (2023) செப்டம்பர் முதல் கிடைத்த அதிகளவான மழைவீழ்ச்சி மற்றும் நான்காவது காலாண்டில் வந்த மின் கட்டண உயர்வு போன்றவற்றின் காரணமாக இந்த இலாபம் கிட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
மொத்த இலாபம்
எவ்வாறாயினும், அறிக்கைகளின்படி, அதிக மழை கிடைக்காவிட்டாலும், எண்ணெய் மற்றும் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியை நம்பியிருப்பதைக் குறைத்தாலும், இலங்கை மின்சார சபை இன்னும் சுமார் 40 பில்லியன் ரூபாய் வருமானத்தை பெற்றிருக்கும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த நிதியாண்டில் (2023)இலங்கை மின்சார சபையின் மொத்த இலாபம் 679 பில்லியன் ரூபாயாகவும் குழுமத்தின் செயற்பாட்டு இலாபம் 143 பில்லியன் ரூபாயாகவுமிருக்க, மின்சார சபையின் தேறிய இலாபம் 132 பில்லியன் ரூபாயாக காணப்படுவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிதி வருமானம்
மேலும், கடந்த ஆண்டில் (2023) இலங்கை மின்சார சபையின் விநியோக செலவுகள் 13.7 சதவீதம் குறைக்கப்பட்டு, ஏனைய செலவுகள் 15.3 சதவீதத்தாலும் குறைந்துள்ளது.
நிதி வருமானம் 29 சதவீதத்தால் விரிவடைந்த, அதே நேரத்தில் நிதிச் செலவு 42. 8 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம், பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிப்பதற்கான துறைசார் மேற்பார்வைக் குழு, 2024 ஆம் ஆண்டிற்கான இலங்கை மின்சார சபையின் மின்சார உற்பத்தி மற்றும் பரிமாற்றச் செலவை கணிசமாக அதிகரித்துள்ளது, இதன் மதிப்பீடு சுமார் 140 பில்லியன் ரூபாயாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.