இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் அண்மைக்கால சட்ட அபிவிருத்திகள் தொடர்பாக ஐக்கிய இராச்சியத்தின் துணை நிரந்தர பிரதிநிதி ரீட்டா பிரெஞ்ச் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விடயங்கள் நேற்று முன்வைக்கப்பட்டது.
கனடா, மலாவி, மொண்டினேகுரோ, வடக்கு மசிடோனியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய இலங்கை தொடர்பான குறித்த முக்கிய குழு சார்பாக ஐக்கிய நாடுகளுக்கான ஐக்கிய இராச்சியத்தின் துணை நிரந்தர பிரதிநிதி ரீட்டா பிரெஞ்ச் அறிக்கை ஒன்றை மனித உரிமைகள் பேரவையில் வெளியிட்டார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “குறிப்பாக இணைய வழி பாதுகாப்புச் சட்டம் நாட்டில் அனைத்து வகையான வெளிப்பாடுகளையும் குற்றமாக்கலாம். இது கருத்து சுதந்திரத்தின் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே இலங்கையின் மனித உரிமைகள் கடமைகள் மற்றும் அர்ப்பணிப்புகளுடன் குறித்த சட்டத்தில் திருத்தங்களை முன்வைக்குமாறு நாம் இலங்கை அரசாங்கத்தை கோருக்கின்றோம்.
பயங்கரவாதத் எதிர்ப்புச் சட்டம்
பயங்கரவாதத் எதிர்ப்புச் சட்டத்திற்கு பதிலாக இலங்கையின் சர்வதேசக் கடமைகளுக்கு இணங்க சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த நவம்பர் மாதம் தடுத்துவைக்கப்பட்ட 9 தமிழர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயமாகும்.
அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் மிகநீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்போரை விடுவிக்குமாறும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.