யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொன்னாலை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து பேரும் இன்றைய தினம் (15) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சந்தேக நபர்கள் ஐந்து பேரும் இன்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கடற்படையும் உள்ளக விசாரணை
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை – பொன்னாலை பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் குடும்பஸ்தர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் மீது தாக்குதல் நடத்த திடீரென பெருந்திரளானோர் கூடியதன் காரணமாக அவர்களை கட்டுப்படுத்துவதற்கான ஆளணி தமது படையினரிடம் இருக்கவில்லை என கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.
எனினும் அந்த தாக்குதல் சம்பவத்தின் போது கடற்படையினர் ஏதேனும் தவறிழைத்திருப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 11ஆம் திகதி காரைநகருக்கு சென்று, வட்டுக்கோட்டை பகுதிக்கு திரும்பும் போது, மகிழுந்தில் பயணித்த சிலரால் உயிரிழந்த குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாள்வெட்டு தாக்குதலும் நடத்தப்பட்டிருந்தது.
இதன்போது, காயமடைந்தவர் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிபிடத்தக்கது.