ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் பங்குனி உத்தர நன்னாளான நேற்றையதினம் (25) ஆயிரக்கணக்காண அடியார்களின் பங்குபற்றுதலுடன் மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
தொடர்ந்து 48 தினங்கள் மண்டலாபிஷேகம்
கடந்த 20 ஆம் திகதி காலை முதல் கும்பாவிஷேகத்திற்கான கிரியைகள் ஆரம்பமான நிலையில் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி முதல் 24 ஆம் திகதி மாலை 2.00 மணி வரை ஆயிரக்கணக்கான அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தினர்.
அதிகாலை முதல் இடம்பெற்ற கிரியைகளைத் தொடர்ந்து காலை 6.00 மணி தொடக்கம் 7.10 மணி வரை பஞ்ச இராஜகோபுரங்களுக்கான கும்பாவிஷேகமும் பௌர்ணமி திதியும் உத்தர நட்சத்திரமும் சித்த யோகமும் பாலவ கரணமும் இடப லக்கினமும் பொருத்திய காலை 9.25 மணி தொடக்கம் காலை 10.33 மணி வரையுள்ள சுப முகூர்த்தத்தில் சபரிவாசமேத துர்க்காதேவிக்கு பெரும் சாந்தி விழா நிகழ்ந்தேறியது.
மிகப்பிரமாண்டமான புனர்நிர்மாணிப்புக்களுடனும் , கருங்கல்லினால் செதுக்கப்பட்ட அபிராமி அந்தாதி கல்வெட்டுப் பொறிப்புக்கள் மற்றும் ஏனைய திருப்பணி வேலைகளுடன் இடம்பெற்ற மகாகும்பாபிஷேக பெருவிழாவில் ஏராளமான அடியார்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 தினங்கள் மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளது.