பிரித்தானிய அரசியல்வாதிகள், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதன் மூலமும் இலங்கையின் மனித உரிமை மீறல்களின் அடிப்படையில் அதன் இராணுவ ஒத்துழைப்பை மதிப்பீடு செய்வதன் மூலமும் இலங்கையின் மீது அதிக அழுத்தத்தை பிரயோகிக்குமாறு பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வெஸ்ட்மினிஸ்டர் மண்டப விவாதத்தை ஆரம்பித்து வைத்து, தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் (APPGT) தலைவரும், கார்ஷால்டன் (Carshalton) மற்றும் வொலிங்டன் (Wallington) நாடாளுமன்ற உறுப்பினருமான எலியட் கோல்பர்ன் இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இராணுவ மயமாக்கல்
“பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து 15 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் இலங்கை தீவின் நிலைமை இன்னும் கவலைக்குரியதாக உள்ளது.
தண்டனையின்மை ஆட்சி செய்கிறது. மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன மற்றும் கடுமையான இராணுவ மயமாக்கலும் தொடர்கிறது.
இந்த நிலையில் பொறுப்புக்கூறல் மற்றும் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளைப் பின்பற்றுவதில் இலங்கையின் தோல்வி, நீடித்த அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான நம்பிக்கையையும் தடுக்கிறது.
பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கையிடமிருந்து எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய கோல்பர்ன், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்கான தெளிவான அரசியல் விருப்பமின்மை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆணைக்குழுக்கள்
ஆயுதப் போரின் போது நடந்த அட்டூழியங்கள் குறித்து விசாரணை நடத்தும் புதிய ஆணையத்தை தற்போதைய ஆட்சி அமைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுக்கள் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. சுதந்திரத்திற்குப் பிறகு 15இற்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், அவை எதுவும் அர்த்தமுள்ள நீதியையோ பொறுப்புக்கூறலையோ வழங்கவில்லை. உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்கக் குழுவும் அதே பாதையைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது என்றும் கோல்பர்ன் குறிப்பிட்டுள்ளார்.